ரெய்டு நடத்திய மோடிக்கும், இபிஎஸ் க்கும் நன்றி: ஆர்.எஸ்.பாரதி கிண்டல்
ரெய்டு நடத்திய மோடிக்கும், இபிஎஸ் க்கும் நன்றி என திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கிண்டல் செய்துள்ளார். திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மகள் வீட்டில் பதினோரு மணி நேரம் ரெய்டு நடந்தது. முன்னாள் அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன் வீட்டிலும் ரெய்டு நடந்தது.
இதுகுறித்து கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டை நடத்தி இருக்கிறார்கள்.

இங்கே அவர்கள் எடுத்த பணமே ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதுவும் குடும்ப செலவுக்காக இந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு அப்படியே கையில் கொடுத்து விட்டு சென்று விட்டார்கள். வந்த அதிகாரிகள் ஏதோ வந்தார்கள் ஏமாற்றத்தோடு சென்றார்கள். செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு செய்து எட்டாயிரம் ரூபாய் தான் எடுத்திருக்கிறார்கள்.
அண்ணாநகர் வேட்பாளர் எம். கே. மோகன் தேர்தல் செலவுக்காக வங்கியில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்து இருக்கிறார். அதில் செலவு போக மிச்சமிருந்த 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துவிட்டு சென்றார்கள். இந்த ரெய்டு நடத்தியதற்காக மோடிக்கும், இபிஎஸ் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.
இந்த ரெய்டு மூலம் திமுகவினர் அப்பழுக்கற்றவர்கள் என்று நிரூபித்து விட்டுச்சென்றதற்காக நாங்கள் திமுக சார்பில் மோடிக்கும் இபிஎஸ்க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.