தஞ்சை மாணவி வழக்கில் திடீர் திருப்பம் - விடுதியில் நடைபெற்ற சடங்கு - நடந்தது என்ன?
தஞ்சை மாணவி லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயற்சி செய்ததாக எழுந்த புகாரில், அம்மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சிலர் சாட்சிகள் கூறியுள்ளனர்.
மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கில், விடுதி வார்டன் சகாய மேரி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால், அம்மாணவி பூப்படைந்தவுடன், சடங்கை இந்து முறைப்படி ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரான பவுலின் தெரிவித்ததாவது-
பள்ளியில் லாவண்யாவை போல 400க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
லாண்யாவை மட்டும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் எண்ணம் வார்டன் சகாய மேரிக்கு கிடையாது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமி பூப்படைந்தார்.
மாணவி இந்து என்பதால் இந்து முறைப்படி சடங்குகளைச் செய்ய சகோதரி சகாய மேரி உள்ளூர் இந்துக்களை அழைத்ததெல்லாம் எனக்கு நினைவில் இருக்கிறது.
லாவண்யா மதம் மாற வேண்டும் என்று சகாய மேரி விரும்பியிருந்தால், கிறிஸ்தவ நடைமுறைப்படி பூப்படைதல் சடங்குகளைச் செய்திருப்பார் அல்லது எந்த சடங்கும் செய்யாமல் விட்டிருப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேபோல், ஜெயக்குமார் என்பவர் கூறுகையில், என் கடையில் பென்சில், பேனா வாங்க வெளியே வரும்போது லாவண்யாவை பார்த்துள்ளேன். சிறுமி நெற்றியில் எப்போதும் பொட்டு இருக்கும். கைகளில் வளையல்களும் அணிந்திருப்பார். அவர்களுக்குள் மதமாற்றம் மாதிரியான பிரச்னைகள் இருந்ததாக பேசப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.