பிரதமரின் உயிர்காக்கும் விருதைப் பெற்ற தஞ்சை காவலர்

By Petchi Avudaiappan Jul 05, 2021 04:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 பிரதமரின் உயிர்காக்கும் விருது தனக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தஞ்சையை சேர்ந்த காவலர் ராஜ் கண்ணா தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தென்னமநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணா. இவர், தற்போது பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தஞ்சை ஆயுதப்படை காவலராக பணியாற்றிய போது அப்போதைய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தர்மராஜ்க்கு (கன்மேன்) பாதுகாவலராக பணியாற்றி வந்தார். அப்போது தென்னமநாட்டிலிருந்து தஞ்சாவூரில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அந்த வழியில் தஞ்சை நகர பகுதியில் உள்ள கல்லணை கால்வாயில் வேளாங்கண்ணிக்கு நடைபயணமாகச் சென்றுகொண்டிருந்த குடும்பத்திலிருந்து ஒரு சிறுவன் படித்துறையில் இறங்கியபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அதை அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பணிக்கு சென்று கொண்டிருந்த ராஜ் கண்ணா சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ஆற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றினார்.

இதனையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்பையன் பிரதமரின் விருதுக்கு பரிந்துரை செய்ததையடுத்து கடந்த 2018 - 19ஆம் ஆண்டிற்கான உயிர்காக்கும் பிரதமர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 22 நபர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.