பக்தி பரவசமூட்டும் சித்திரை திருவிழா : தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

thanjavur chithiraifestival periykovilthanjavur
By Irumporai Apr 13, 2022 07:50 AM GMT
Report

உலகபுகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது .

தஞ்சை பெரிய கோவில் எனும் பெருவுடையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.அதில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்தது.

இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

இன்று அதிகாலை 5.15 மணியளவில் கோவில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பாலம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு, கோவில் வெளியே வந்து சோழன் சிலை வழியாக மேலவீதியில் உள்ள தேர்மண்டபம் வந்தடைந்தனர்.

பக்தி பரவசமூட்டும் சித்திரை திருவிழா : தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் | Thanjavur Periya Kovil Chithirai Car Festival

அங்கு விதவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருள, காலை 7 மணியளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேருக்கு முன்னர் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மன், சண்டிகேசுவரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.

தேர் செல்லும் வழியில் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடியே சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர். 4 ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். மதியம் தேர் நிலையை வந்தடைந்தது. தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால் தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்ததால் இன்று நடைபெற்ற தேரோட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.