ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம் - தஞ்சையில் பரபரப்பு சம்பவம்
தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் பிரவீன், பரிமலேஸ்வரன், மணிகண்டன் ஆகியோர் ஒரத்தநாடு பிரிவு சாலையில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். மூவரும் விடுதிக்கு சென்ற பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
மூவரும் ஒரத்த நாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் உடல் ஒவ்வாமை அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிக்கன் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை சோதனைக்காக அனுப்பியுள்ளனர். கடைக்கு ஒரு வாரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 500க்கும் மேற்பட்டோர் தங்கள் கடையில் சாப்பிட்டதாகவும், மூவரை தவிர வேறு யாருக்கும் பிரச்னை இல்லை என்றும் கடை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் மறுபுறம் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதற்கு முன்பே கடையில் உள்ள பொருட்களை, பின்பக்கம் வழியாக அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த காட்சிகள் செல்போனில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக பல ஷவர்மா விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.