1000 ஆண்டு பழமையான கோவில்....வானுயர நிற்கும் தஞ்சையின் வரலாற்றை அறிவோம்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைகப்படும் தஞ்சையின் வரலாறு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வரலாறு
தஞ்சை மிகவும் பாரம்பரிய மிக்க தொன்மையான தமிழ் நகரங்களில் ஒன்றாகும். தமிழக நிலப்பரப்பை அதிக காலம் ஆட்சி செய்த சோழ சோழ பேரரசின் தலைநகரான தஞ்சை விளங்கியது. விஜயாலய சோழன் முதல் முதலாம் இராசராச சோழன் வரை சோழர்கள் இந்நகரை தங்களது தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
சோழ பேரரசிற்கு பிறகு தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசுகளின் தலைநகரமாகவும் தஞ்சாவூர் விளங்கியது. தஞ்சை என்றால் "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என பொருள்படும். இந்நகரில் அதிகளவில் பனை மரங்கள் இருக்கும் காரணத்தினால் தஞ்சை என பெயர் பெற்றது.
கடந்த 8-ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்ட இந்நகரம், பல அரசர்களின் ஆட்சி கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. களப்பிரர்கள், முத்தரையர்கள் பின்னர் சோழ அரசின் கீழும், பாண்டிய அரசர்களின் கீழும் இந்நகரம் இருந்துள்ளது.1676-ஆம் ஆண்டு மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காசி தஞ்சையில் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சியை நிறுவினார். அவர்களின் வழியில் இரண்டாம் சரபோஜி ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெசுலி பிரபுவுடன் 1799-இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாஜி மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லை என்ற காரணத்தால் தஞ்சைக் கோட்டையும் 1856-இல் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது.
பொருளாதாரம்
இந்நகரில் பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு நெல்,வாழை, தேங்காய், கேழ்வரகு,கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களும் பயிரிடப்படுகிறது.
தஞ்சாவூரில் விவசாயத்திற்கு மூன்று பருவங்கள் உள்ளன - ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவத்தை குறுவை என்றும், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான பருவத்தை சம்பா என்றும் செப்டம்பர் - அக்டோபரில் துவங்கி பிப்ரவரி - மார்ச் வரையிலான பருவத்தை தலாடி என்றும் அழைக்கின்றனர்.
அதே போல தமிழகத்தில் பட்டு நெசவு செய்யும் முக்கியமான நகரமும் தஞ்சை தான். கடந்த 1991 ஆம் ஆண்டில் 200 பட்டு நெசவு அலகுகள் தஞ்சையில் இருந்தன. அதே போல இசைக்கருவிகளும் தஞ்சையில் தன அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. வீணை, தம்புரா, வயலின், மிருதங்கம், தவில், மற்றும் கஞ்சிரா போன்ற தஞ்சையில் தயார் செய்யப்படுகின்றன.
தஞ்சை கோவில்
தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜ சோழன் கோவில் அல்லது பிரகதீஸ்வர கோவில் என்றழைக்கப்படும் தஞ்சை கோவில் உலக பிரசித்தி பெற்றது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் சுமார் 6 ஆண்டுகள் இந்த கோவிலின் கட்டுமான பணிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நவீன கட்டுமானத்திற்கு புலப்படாத தொழில்நுட்பம் கொண்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது இன்றளவும் ஆச்சரியமே.
இந்த கோவிலில் மதிய வேளைகளில் கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும். கோபுரத்தின் மேலுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். தஞ்சை கோயில் வெறும் கோயிலாக மட்டும் பார்க்கப்படாமல், பாரம்பரியம், வரலாறு தொல்லியல் தன்மை ஆகியவை வியக்க வைக்கும் வகையில் உள்ளதால் யுனெஸ்கோவால் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
தஞ்சை அரண்மனை
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்களான சேவப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது இந்த அரண்மனை, மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் சில இடங்கள் மெருகேற்றப்பட்டன.
பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், இராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்ட இந்த அரண்மனை 110 சதுரடி பரப்பளவுக்கு விரிந்துள்ளது.
கல்லணை
தமிழ்நாட்டிலுள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் முதலாம் நூற்றாண்டில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.
தமிழர் பல்கலைக்கழகம்
செப்டம்பர் 15ஆம் தேதி, 1981-ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் சுமார் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது நிறுவப்பட்டது.
இந்த பலக்லைக்கழகத்தில் கலைப்புலம்(சிற்பத்துறை, இசைத்துறை, நாடகத்துறை), சுவடிப்புலம்(ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச்சுவடித்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை) வளர்தமிழ்ப்புலம்(அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, மொழிபெயர்ப்புத் துறை, அகராதியியல் துறை, சமூக அறிவியல் துறை, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை) மொழிப் புலம் (இலக்கியத் துறை, மொழியியல் துறை, மெய்யியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வு மையம், நாட்டுப்புறவியல் துறை, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி)அறிவியற் புலம்(சித்த மருத்துவத்துறை, தொல்லறிவியல் துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை, கட்டடக்கலைத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை) என பல பாடப்பிரிவுகள் உள்ளன.