தஞ்சை தேர் விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!
தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை சென்றார்.
அதன் பின் அவர் சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்றடைந்தார்.முதலாவதாக இந்த விபத்தில் உயிரிழந்த 15 வயது சிறுவன் சந்தோஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார்.அதன் பின் விபத்தில் பலியான 11 பேரின் இல்லத்திற்கும் சென்று ஆறுதல் தெரிவிக்கிறார்.
இதன் பின் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
முதலமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.