தஞ்சையில் நடந்தது தேர் திருவிழாவும் அல்ல,தேரும் அல்ல - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்..!
அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் நடந்த தேர் திருவிழா நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
சட்டப்பேரவையில் தேர் விபத்து தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்த் திருவிழாவும் அல்ல,அது தேரும் அல்ல அது சப்பரம் என்று பேசினார்.
அங்கு நடைபெற்ற விழா அரசுக்கு தெரிவிக்காமல் ஊர்மக்களால் நடத்தப்பட்ட திருவிழா என்று தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அனைத்து கட்சியினரும் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் இந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும்,நிவாரணம் 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.