கல்யாண ஆசை; வழுக்கை தலையால் நிராகரித்த பெண்கள் - கொள்ளையனாக மாறிய நபர்!
திருமணத்திற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை சம்பவம்
தஞ்சாவூர் மாவட்டம் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 20ம் தேதி கீதா வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 48 சவரன் நகைகள் மற்றும் ரூ.10,000 ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது. இதுகுறித்து கீதா போலீசில் புகார் அளித்ததை அடித்து, கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேசன் என்பவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கல்யாணக் கனவில் கொள்ளையனாக மாறிய சோகக் கதை தெரியவந்தது.
திருடனுக்கு சிறை
வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்த வெங்கடேசனுக்கு பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெண் பார்க்கப் போன இடங்களில் எல்லாம், வெங்கடேசனுக்கு தலையில் முடி இல்லாத காரணத்தால் மறுத்துள்ளனர்.
இதனால் நொந்துபோன வெங்கடேசன் கொள்ளையடித்தாவது திருமணம் நடத்தி விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து தலையில் விக் வைத்து இரண்டு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டார்.
ஆனால் மூன்றாவது கொள்ளை சம்பவம் தோல்வியில் முடிந்து தற்போது போலீஸில் பிடிபட்டார். வெங்கடேசனிடம் இருந்து 60 சவரன் நகை, ஏ.டி.எம். கார்டு, வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.