குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா - கரூரில் அதிரடி அறிவிப்பு

thangathanthai karurdistrict mensterlization
By Petchi Avudaiappan Nov 20, 2021 05:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்கு தங்கத் தந்தை பட்டம் வழங்கப்படும் என கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து கௌரவிக்கும் விழா இன்று நடைபெற்றது. தமிழகத்திலேயே முன்மாதிரி திட்டமாக நடந்த இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கருத்தடை செய்துகொள்வோருக்குத் தங்கத் தந்தை விருது வழங்கி கவுரவிக்கப்படுவதுடன் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தொகை வேண்டாம் என்றால், இலவச வீட்டுமனைப் பட்டா, வீட்டில் உள்ள முதியவர் ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை, விலையில்லாக் கறவை மாடு, வெள்ளாடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் இலவச கால்நடைக் கொட்டகை, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையதாரர் இல்லாமல் வங்கிக் கடன் உதவி, வேளாண்மைத் துறையின் மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பெற்றுக் கொள்ளலாம்.

இவை தவிர, தோட்டக்கலைத் துறை மூலமாக தென்னை, பல அடுக்குப் பயிர் திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.40,000 வரை மானியம் வழங்குதல், விவசாயிகளுக்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.445 வீதம் 50 சதவீத மானியத்துடன் 1000 ச.மீ. அளவில் பசுமைக் குடில் திட்டத்தின் மூலம் பாலித்தீன் குடில் அமைத்துத் தருதல், சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.355 வீதம் 50 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக 4 சதுர மீட்டர் வரை நிழல் வலை கூடாரம் அமைக்க நிதி உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உபகரணங்கள் இலவசமாக வழங்குதல் போன்ற ஏதேனும் ஒரு அரசுத் திட்டத்தில் முன்னுரிமையளித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.