'சீட் இல்லைனாலும் பரவாயில்லை, இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்' - திமுகவுக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கடிதம் வழங்கியிருந்தார்.
ஆனால் திமுக தேர்தலில் போட்டியிட இடம் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த தமீமுன் அன்சாரி திமுகவிற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார் என செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமீமுன் அன்சாரி, “மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளோம்.
தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்கவில்லை என்பது அதிருப்தி தான் என்றாலும் தமிழகத்தின் நலனுக்காக திமுக கூட்டணிக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவு தெரிவித்துள்ளோம்” என்றுள்ளார். அந்த ஐந்து கோரிக்கைகள்
1. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் இருக்கும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை சாதி, மத பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும்
2. மது ஒழிப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
3. சச்சார் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்
4. சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அனைத்து சமூகங்களும் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
5. சிஏஏ - என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்