தற்கொலைக்கு முயன்ற என்னை காப்பாற்றியது நயன்தாராதான் - தம்பி ராமையா அதிர்ச்சி தகவல்
தற்கொலை செய்ய முயன்றபோது நயன்தாரா காப்பற்றியதாக தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.
தம்பி ராமையா
1999 ஆம் ஆண்டு வந்த மலபார் போலீஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தம்பி ராமையா. அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி குணசித்ர மற்றும் நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார்.
மேலும் 3 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவருடைய மகன் உமாபதி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ராஜகிளி என்ற படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
அம்மா மரணம்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தற்கொலைக்கு முயன்றது குறித்து பேசியுள்ளார். அதில் பேசிய அவர், "அப்பா நன்றாக கவிதை எழுதுவார். நான் அவர் அளவுக்கு எழுதாவிட்டாலும் ஓரளவுக்கு எழுதுவேன். சில படங்களுக்கு வசனம் கூட எழுதி உள்ளேன். அம்மாவிற்கு கூட அடிக்கடி கவிதைகள் எழுதிக் கொடுப்பேன்.
அதில் உன்னுடைய மூச்சுக்காற்று இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் நான் வாழ்ந்தால் போதும் அம்மா.. என்றுதான் எப்போதும் எழுதிக் கொடுப்பேன். ஒரு நாள் அம்மா இறந்து போய்விட்டார். எனக்கு அது பெரிய அதிர்ச்சியாகிவிட்டது அம்மா இல்லை என்றால் நான் இல்லை என்று நினைத்திருந்தேன்.
தற்கொலை எண்ணம்
அம்மா போன இடத்திற்கு நானும் போய்விட வேண்டும், தற்கொலை செய்ய வேண்டும்.. தேசிய விருது வாங்கும்போது கிடைக்காத பெருமை அம்மாவோடு மகனும் சேர்ந்து இறந்து விட்டார் என்று செய்தி வரும் போது கிடைக்கும் என்றெல்லாம் என்னுடைய மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன்.
தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, அம்மாவின் மீது உள்ள பாசத்தால் தற்கொலை செய்ய நினைக்கிறோமே, இப்போ 4 படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கி இருக்கிறோம். நாம் இறந்துவிட்டால் அவர்களுக்கும் சேர்த்து கஷ்டம் தானே என்று தோன்றியது.
காப்பாற்றிய நயன்தாரா
அந்த நேரத்தில் என் அம்மாவுடைய இறப்பு செய்தி எப்படியோ தெரிந்து, நடிகை நயன்தாரா எனக்கு போன் பண்ணி பேசினாங்க. அப்போ நான் நயன்தாராவோடு டோரா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். நான் மனதில் குழப்பத்தோடு இருந்தபோது நயன்தாரா எனக்கு போன் செய்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அவங்க எதார்த்தத்தை புரிய வச்சாங்க அதற்குப் பிறகு என்னுடைய தற்கொலை சிந்தனையை விட்டேன். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் தற்கொலை செய்யக்கூடாது என்று நானே பெரிய வசனம் எழுதி இருந்தேன் ஆனால் எனக்கு ஒரு கஷ்டம் வரும்போது தற்கொலை தான் தீர்வு என்று ஒரு மனநிலை வந்தது.
அந்த நேரத்தில் நயன்தாரா எனக்கு போன் செய்யவில்லை என்றால் நான் என்ன முடிவு எடுத்திருப்பேன் என்று தெரியவில்லை. அன்னைக்கு நாம் இறந்து போயிருந்தால் இன்னைக்கு என்னுடைய பிள்ளையின் கல்யாணத்தை பார்க்க முடியாமல் போயிருப்பேனே என்று என்னுடைய மகனுக்கு திருமணத்தின் போது நினைத்து பார்த்தேன்" என பேசினார்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.