'தம்பி மல, பில் இன்னும் வரல' அண்ணாமலைக்கு எதிராக கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

V. Senthil Balaji DMK K. Annamalai
By Thahir Dec 27, 2022 07:18 AM GMT
Report

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையேயான “வாட்ச் போர்” முடிந்தபாடில்லை.

செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை 

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

அமைச்சரான முதல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியும், அண்ணாமலையும் சமூக வலைத்தளங்களில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

செந்தில் பாலாஜி தொடர்பான ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என கூறிய அண்ணாமலை ஒரு சில ஆவணங்களை வெளியிட்டார்.

சொத்துக்களை ஒப்படைக்க தயார் 

இந்த நிலையில் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் வாட்ச் பற்றி, ஆடு மேய்க்கும் விவசாயி அண்ணாமலைக்கு ரஃபேல் வாட்ச் வாங்கும் அளவுக்கு பணம் ஏது? அந்த வாட்ச் வாங்கிய பில்லை வெளியிடுவாரா? என்று கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதற்கு அண்ணாமலை 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு வாங்கப்பட்ட ர?பேல் வாட்ச் ரசீது உள்ளிட்ட வருமான விவரங்களை விரைவில் தமிழக மக்களை சந்திப்பதற்காக துவங்க உள்ள பாதயாத்திரை முதல் நாளில் எனது அனைத்து சொத்து விவரங்கள் வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டு செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன்.

பொது வெளியில் தனது சொத்து விவரங்களை வழங்கியதில் ஒரு பைசா அதிகமாக இருந்தாலும், எனது சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.  இதுபோல திமுகவினர் அவர்களின் சொத்து விவரங்களை வெளியிட தயாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பில் இருக்கிறதா? இல்லையா?

இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள செந்தில் பாலாஜி, திமுகவினர் தேர்தலில் போட்டியிடும் போது, சொத்து விவரங்களை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

அத்தோடு பில் இருக்கிறதா? இல்லையா? என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம், ஆம்/ இல்லை என்பது தானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்...மே மாதம் வெயில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால், அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்... கோழி கொக்கரக்கோன்னு என்பது போல இருக்கிறது என்று பதிவிட்டு அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாமலை திமுக புள்ளிகளின் சொத்துப்பட்டியலை ஒவ்வொன்றான வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

தம்பி மல.. பில் இன்னும் வரல..?

இந்த நிலையில் கரூரில் செந்தில் பாலாஜியின் ஆதராவாளர் ஒருவர் இந்த விவகாரத்தை மையப்படுத்தி போஸ்டர்களை ஒட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் திருக்காம்புலியூர் அருகே உள்ள சுவர்களில் காணப்படும் அந்த போஸ்டர்களில், தம்பி மல! பில்லு இன்னும் வரல..?, என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அதன் வாட்ச் ஸ்க்ரீனில் வடிவேல் படமும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.