மூன்றாவது கணவரின் சொத்துக்காக பெண் இப்படி செய்யலாமா? - அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

thanjavaur childbabysmuggling
By Petchi Avudaiappan Oct 09, 2021 06:41 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 தஞ்சாவூர் அருகே கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

தஞ்சாவூர் அருகேயுள்ள பர்மா காலனி பகுதியை சேர்ந்த குணசேகரன் - ராஜலட்சுமி தம்பதிக்கு தஞ்சை அரசுமருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் குழந்தை பிறந்தது.

காதல் திருமணம் செய்து கொண்டதால் உதவிக்கு ராஜலட்சுமி யாரும் இன்றி தனியாக இருப்பதை பார்த்த பெண்மணி ஒருவர் உதவி செய்வது போல் மூன்று நாட்கள் கூடவே இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை ராஜலட்சுமியை கழிவறைக்கு அனுப்பிவிட்டு, குணசேகரனையும் கடைக்கு அனுப்பி விட்டு பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் கட்டைப்பையில் பெண் குழந்தையை கடத்தி சென்றார். இச்சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணி நடைபெற்றது.அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்பெண்மணி சாலையில் ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குழந்தையை கடத்தியதாக பட்டுக்கோட்டை காலனியை சேர்ந்த விஜி என்பவரை கைது செய்தனர். விசாரணையில், பட்டுக்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் விஜிக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தாகி உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் என்பவரை மூன்றாவதாக விஜி திருமணம் செய்துள்ளார்.

அவரின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த 10 மாதமாக அவரை நம்ப வைத்துள்ளார். மேலும் வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு தஞ்சை மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை கடத்துவதற்கான திட்டத்தை போட்டுள்ளார்.

அப்போதுதான் குணசேகரன் ராஜலட்சுமி உறவினர்கள் யாரும் இல்லாமல் தனியாக இருப்பதை கண்டு அவர் குழந்தையை கடத்திச் சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குழந்தையை கடத்துவதற்கு முன்பு, குழந்தைக்காக டயபர் ஒன்றை அந்த மர்மப் பெண் வாங்கியுள்ளார். அப்போது டயபர் வாங்கும்போது, அதற்கான பரிசுத் தொகை பெறுவதற்கான கூப்பனில் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு உள்ளார்.

அந்த தொலைபேசி எண்ணை வைத்து தான் காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.