தை அமாவாசை -சென்னை முதல் குமரி வரை நீர் நிலைகளில் குவிந்த மக்கள்!
தை அமாவாசையை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நீர் நிலைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
தை அமாவாசை
தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.இந்த ஆண்டு தை அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம்.
இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்,
தர்ப்பணம்
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஆகிய தீர்த்தங்களில் அதிகாலையிலேயே குவிந்த ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். எள் பச்சரிசி தர்ப்பபை வைத்து வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர். சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும் பாபாநாசத்திலும் குவிந்த ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.