அமைச்சர் அன்பில் மகேஷுடன் பேச்சுவார்த்தை தோல்வி - ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர முடிவு!
அமைச்சர் அன்பில் மகேஷுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டம்
கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) 40,000 பேர் ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்றனர். பின்னர் அவர்களுக்கு பனி நியமனம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு டெட் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் பணி நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக டெட் தேர்ச்சி பெற்ற 15,000க்கும் மேற்பட்டோர் ஆசிரியராகப் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்று, பணிக்காக காத்திருக்கும் 50-க்கும் மேற்பட்டோர், திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் அலுவலகம் முன் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த போராட்டத்தில் 2013ல் டெட் எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நியமனத் தேர்வு நடத்துவதை ரத்து செய்து விட்டு, உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அமைச்சரின் உதவியாளர் சேகர் அருண் மற்றும் போலீஸார், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அக்.31ம் தேதி (இன்று ) சென்னைக்கு வருமாறு டெட் ஆசிரியர் சங்க முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்நிலையில் இன்று டெட் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
ஆனால் அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இன்று முதல் ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.