“அவனா இவனா..இவன் அவனா?” - கடும் குழப்பத்தில் கோலி ; இதுதான் காரணமா?

cricket test series ind vs sa tough competition for 6th position
By Swetha Subash Dec 23, 2021 12:04 PM GMT
Report

6வதாக களமிறங்கும் இரண்டு வீரர்களை தேர்வு செய்வதில் விராட் கோலிக்கு மிகவும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுவரை ஒருமுறை கூட தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. இதனால் இந்த முறை கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா விலகியதால், ஓப்பனிங்கிற்கு கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்குவது உறுதியாகியுள்ளது.முதல் விக்கெட்டிற்கு சட்டீஸ்வர் புஜாரா களமிறங்குகிறார்.

அதன்பின்னர் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர். மேலும் 5வது பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என தெரிகிறது.

இந்நிலையில் 6வது இடத்திற்கு முழு நேர பேட்ஸ்மேனை களமிறக்குவதா அல்லது ஆல்ரவுண்டரை களமிறக்குவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஷர்துல் தாக்கூரை சேர்த்துக்கொண்டால் பவுலிங் மற்றும் நீண்ட பேட்டிங் வரிசை கிடைக்கும்.

இது ஒருபுறம் இருக்க, முழு நேர பேட்ஸ்மேனை களமிறக்கலாம் என்ற பேச்சுக்களும் உள்ளன. பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய 3 பேரே வேகப்பந்துவீச்சுக்கு போதும் என்றால் கூடுதல் பேட்ஸ்மேனை வைத்துக்கொள்ளலாம்.

அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் ஹனுமா விஹாரி அல்லது ரகானேவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் தற்போது கூடுதல் பேட்ஸ்மேனா அல்லது ஆல்ரவுண்டரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

சீனியர் வீரர் ரகானே அயல்நாட்டு களங்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவருக்கு இந்த தொடர் தான் கடைசி வாய்ப்பு என்பதால் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.

மற்றொரு புறம் ஹனுமா விஹாரி கடந்த ஒருமாத காலமாக தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருகிறார். அவரின் ஃபார்மும் சிறப்பாக இருப்பதால் அவரையும் நீக்க முடியாது.

இந்த சூழலில் தான் இரண்டு வீரர்களை தேர்வு செய்வதில் விராட் கோலிக்கு மிகவும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.