சொந்தவீட்டு கனவினை கரைத்த கரையான்: 5 லட்ச ரூபாயை இழந்து கண்ணீர் விடும் ஏழைப்பெண்!
கிராமங்களில் இப்போதும் சொந்த வீடு கட்ட பணம் சேமித்து வைப்பவர்கள் எல்லோரும் வங்கியில் சேமித்து வைப்பதில்லை. பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடுக்கு பானைகள், பெட்டிகளில் வைத்திருப்பது வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தினால் ஒரு ஏழைக்குடும்பம் இன்று கண்ணீர்விட வேண்டியதாகிவிட்டது. அவர்களின் கண்ணீருக்கு காரணமாக அமைந்து விட்டது கரையான்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் பகுதியை சேர்ந்த ஜமாலியா, பன்றி மேய்த்து பிழைப்பு நடத்தி வருபவர். இவர் பன்றி வளர்ப்பின் மூலம் கிடைத்த பணத்தை இரும்பு பெட்டியில் சேர்த்து வந்திருக்கிறார். நெடுநாட்கள் பெட்டியை திறக்காமல் வைத்திருந்ததால் பணத்தை எல்லாம் கரையான் அரித்துவிட்டன.
தற்போதூ வீடு கட்டுவதற்காக பெட்டியை திறந்த போது அதிலிருந்த ரூபாய் நோட்டுகள் கரையான் அரித்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டார். இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அழுகின்றார் அந்த பெண்.சொந்த வீடு என்பது சாமானிய மக்களுக்கு ஒரு கனவு வங்கியில் பணம் வைத்திருந்தால் பணம் பத்திரமாக இருந்திருக்கும்.
ஆனால் இவர்களுக்கு அது பற்றிய தகவல் சரியாக தெரியாத காரணத்தால் செய்வதறியாது தவிக்கின்றனது இந்த ஏழைக் குடும்பம்.
இவர்களுக்கு அரசாங்கம்தான் செல்லரித்த பணத்துக்கு பதிலாக புதிய பணம் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.