சென்னையில் பதற்றம்: சிறுவர்கள் கையில் ஏவுகணை வெடி பொருள் சிக்கியது எப்படி?

india chennai hand boys missile
By Jon Apr 08, 2021 03:05 PM GMT
Report

சென்னையில் உள்ள பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி எதிரில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சிறுவன் பந்தை அடிப்பதற்கு முன்பு கிரிக்கெட் மட்டையை தரையில் தட்டியுள்ளான்.

அப்போது தரையில் ஏதோ இரும்பு பொருள் இருப்பது தெரியவந்தது. இதையறிந்த அந்த சிறுவன் என்ன என்று கையால் தோண்டி பார்த்துள்ளான், அப்போது அந்த இரும்பு பொருள் ராக்கெட் போல் இருந்துள்ளது. இந்த தகவலை சக சிறுவர்கள் அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் தரணீஸ்வரி மற்றும் எஸ்.ஐ. நரசிம்மன் ஆகியோர் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

அப்போது ராக்கெட் போல் உருவம் கொண்ட அந்த இரும்பு பொருள், ராணுவத்தில் ராக்கெட் லாஞ்சரில் போட்டு பயன்படுத்தக்கூடிய வெடி பொருள் என தெரிய வந்தது. பின்னர் அந்த வெடி பொருளை போலிசார் கைப்பற்றி அதை செயலிழக்கச் செய்ய கும்மிடிபூண்டிக்கு எடுத்துச் சென்றனர். இதனால் பெரியபாளையத்தில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வெடிபொருள் பெரியபாளையம் பகுதிக்கு எப்படி வந்தது என போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.