டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி

breaking tennis rafael nadal tests positive for covid
By Swetha Subash Dec 20, 2021 01:48 PM GMT
Report

பிரபல டென்னிஸ் நட்சத்திர வீரர் நடால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த நடால் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருந்தவர். தற்போது தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்றவர் நடால்.

2021 பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார். எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விம்பிள்டன், டோக்கியோ ஒலிம்பிக், யு.எஸ். ஓபன் என முக்கியமான போட்டிகளில் இருந்து விலகினார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021ஆம் பருவத்தை முடித்துக்கொள்வதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் நடால் அறிவித்தார். இதனால் மேற்கண்ட தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், நான்கு மாதம் கழித்து அபுதாபியில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் நடால் கலந்துகொண்டார்.

இந்நிலையில் அபுதாபியிலிருந்து ஸ்பெயினுக்குத் திரும்பிய நடால், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: குவைத், அபுதாபியில் இரு நாள்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது எனக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அபுதாபி போட்டி முடிந்த பிறகு ஸ்பெயினில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

எனினும் போட்டிகளில் கலந்துகொள்வது பற்றி விரைவில் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தம்மை இப்போது தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தம்முடன் தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் தெரிவித்துவிட்டதாகவும் நடால் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய தொடர் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள நடால் இந்த மாத இறுதியில் மெல்பர்ன் செல்லத் திட்டமிட்டிருந்தார்.