சேவல் சண்டை நடத்த இடைக்கால தடை - மதுரை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் ஜனவரி 25-ம் தேதி வரை எந்த பகுதியிலும் சேவல் சண்டை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சேவல் சண்டைகளுக்கு பெயர் போனது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தை சேர்ந்த கோவிலூர் மற்றும் பூலாம் வலசு கிராமங்கள் தான்.
இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு பொழுது போக்கிற்காகவும், பாரம்பரிய சேவல் இனங்களை பாதுகாக்கும் பொருட்டும் வீரவிளையாட்டாக சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சேவல் சண்டைக்கு கொண்டு வரப்படும் அனைத்து சேவல்களையும்,
கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பிறகே மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதித்தனர்.
இந்த நிலையில் கரூர் சேர்ந்த பிரேம்நாத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று அந்த மனுவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதில், "கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் வெறும் கால்களில் சேவல் சண்டை விடுவதாக உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சேவல் சண்டை நடத்துகின்றனர்.
ஆனால், இந்த சேவல் சண்டைப் போட்டிகளில் சட்டத்திற்கு புறம்பாக சேவல் கால்களில் கத்தியை கட்டி சண்டைக்கு விடுகின்றனர். இதனால், வருடந்தோறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
எனவே, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.
மேலும், வழக்கு குறித்த தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு தமிழ்நாட்டில் ஜனவரி 25ஆம் தேதி வரை எந்த பகுதிகளிலும் சேவல் கட்டு நடத்த அனுமதி இல்லை என அதிரடி உத்தரவை வழங்கினார்.