தேர்தலுக்காகவே 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு : டிடிவி தினகரன் விமர்சனம்

sasikala seeman aiadmk
By Jon Mar 02, 2021 02:39 PM GMT
Report

வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகால கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வர் பழனிசாமியின் இந்த அறிவிப்பு தேர்தலுக்காகவும் கூட்டணிக்காகவும் தான் என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு 6மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது. 109 சமூகங்களை உள்ளடக்கிய விஙிசி பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும்.

எதற்காக இந்த அவசர கோலம்? வன்னியர் உள் ஒதுக்கீட்டினை ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் கமிட்டி என்ன ஆனது? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.