யாராக இருந்தாலும் கோவில் சொத்துகளை அபகரித்தால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!
கோவில் சொத்துகளை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் யானை பார்வதிக்கு கண் புரை நோய் ஏற்பட்டு, கடந்த ஒன்றரை வருடங்களாக மருத்துவ சிகிச்சையில் உள்ளது.
தற்போது நோய் முற்றி யானைக்கு மேல் சிகிச்சைத் தேவைப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து யானையை நேரில் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றரை வருடங்களாக கண் புரை நோயினால் பாதிக்கப்பட்ட கோவில் யானை பார்வதிக்கு உடனடியாக சிறப்பு கால்நடை மருத்துவர்களைக் கொண்டு, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் 3 முறை இந்த மதுரை மத்திய தொகுதி உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பேசியும், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி சென்னையிலிருந்து மருத்துவ நிபுணர் அனுப்பப்பட வில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் யானை பார்வதிக்கு சிகிச்சை அளித்து வந்த ரமணி என்ற கால்நடை மருத்துவரும் தேனிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரை மீண்டும் இங்கு பணியமர்த்த கால்நடைத் துறை அமைச்சரிடம் பேசி, நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் வெளி மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் உரிய மருத்துவ நிபுணர்களை வரவழைத்து யானை பார்வதிக்கு சிகிச்சை அளித்து, யானையின் உயிரைக் காப்பாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.