நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் சிக்கிய டெலிகிராம் செயலி .. மத்திய அரசின் திடீர் முடிவு!
இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தடைவிதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகிராம்
டெலிகிராம் உலகம் முழுவதும் பல நாடுகளிலும் உள்ள மக்களால் டெலிகிராம் செயலி தகவல் பரிமாற்றத்திற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே டெலிகிராம் செயலி மூலம் பணப்பரிமாற்றத்தில் மோசடி, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாகப் புதிய திரைப்படங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி அசர்பைஜானில் இருந்து பாரிஸ் விமான நிலையம் வந்த டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் டெலிகிராம் செயலியை இந்தியா உள்படச் சில நாடுகளில் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக மத்திய அரசு டெலிகிராம் செயலியைத் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. ஜார்க்கண்ட், குஜராத்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றன.
இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யுஜிசி-நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் டெலிகிராம் சிக்கியது.
வினாத்தாள் டெலிகிராமில் ₹5,000 முதல் ₹10,000 வரை விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தியாவில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த டிக்டாக் உள்ளிட்ட செயலிகளும் முன்னதாக தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.