படகை சரி செய்ய நடுக்கடலில் குதித்த இளைஞர் : அடுத்து நடந்த விபரீத சம்பவம்!
தெலுங்கானாவின் ராஜண்ணா-சர்கில்லா மாவட்டத்தின் வெமுலவாடா பகுதியை சேர்ந்த 25 வயதான யஷ்வந்த் குமார் என்ற இளைஞர் ஐதராபாத்தில் பி.டெக் படிப்பு முடித்துவிட்டு கடந்த டிசம்பரில் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமையன்று பொழுதுபோக்க தனது நண்பர்களான சுப உதய், மைசூரா, சரண், ஸ்ரீகர் மற்றும் சார்வரி ஆகியோருடன் வாடகைக்கு படகு ஒன்றை எடுத்து கொண்டு மேற்கு ஃபுளோரிடாவின் கிராப் தீவுக்கு சென்றுள்ளார்.
வழியில் படகு திடீரென நின்று விட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து படகை சரி செய்ய நடுக்கடலில் குதித்துள்ளார் யஷ்வந்த். ஆனால், கடலில் நீரோட்டம் வலிமையாக இருந்துள்ளதால் அவர்கள் எல்லோரும் அலையில் அடித்து சென்றனர்.
அந்த வழியே வந்த ஒக்கலூசா கவுன்டி ஷெரீப் அலுவலக படகு ஒன்று தேடுதல் பணியில் 4 நண்பர்களை மீட்டு உள்ளது. ஆனால் கடலில் அலைகள் பெரிய அளவில் எழுந்து வந்ததில் யஷ்வந்த் படகிற்கு வர முடியவில்லை.
இதில் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டார். தொடர்ந்து, கடலோர காவல் படையினர் பல மணிநேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், காணாமல் போன யஷ்வந்தின் உயிரற்ற உடல் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.