விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொலை செய்த இளம்பெண்! நடந்தது என்ன?
தெலுங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள யாச்சரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தசரத்- லட்சுமி.
இவர்களுக்கு ஒரு மகனும், சுரேகா உட்பட மூன்று மகள்களும் இருக்கின்றனர், இதில் சுரேகா தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தசரத்- லட்சுமி தம்பதியினர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர், கடன் தொல்லையால் பெற்றோர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவர்களது பிள்ளைகள் கூறியுள்ளனர்.

சடலங்களை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கினர்.
அதில் சுரேகா முன்னுக்குபின்முரணான தகவலை தெரிவித்துள்ளார், அவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் சுரேகா, தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சுரேகாவுக்கும், இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது, இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவர காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சுரேகாவுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த சுரேகா பெற்றோரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார், இதன்படி சம்பவ தினத்தன்று வீட்டிற்கு வந்த சுரேகா, கால் வலிக்கான மருந்து எனக்கூறி விஷ ஊசியை செலுத்தியுள்ளார்.
மேலும் அவருடைய சகோதரனுக்கு போன் செய்து, பெற்றோர் சுயநினைவின்றி கிடப்பதாக கூறியுள்ளார், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடன் தொல்லையால் பெற்றோர் இறந்தவிட்டதாக நாடகமாடியுள்ளார், இறுதியில் விசாரணையில் மாட்டிக்கொண்டார் சுரேகா.
