பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து விரட்டியடிப்போம் - சபதம் எடுத்த முதலமைச்சர்
பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில நலன்களையும் மாநில உரிமைகளையும் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், , மாநிலங்களின் வளர்ச்சிக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வரும் சூழலில் இந்த கூட்டணிக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆதரவளிப்பார் என்ற தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடியை சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தெலங்கானாவின் ஜங்கான் மாவட்டத்தில் உள்ள யஷ்வந்த்பூர் என்ற இடத்தில் பேசிய அவர், தேசிய அளவிலான எந்தவொரு திட்டத்தையும் தெலங்கானாவுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும், மருத்துவக் கல்லூரிகளைக் கூட தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய சந்திரசேகர் ராவ், நீங்கள் தெலங்கானா வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் உங்களை ஆட்சியில் இருந்து விரட்டியப்போம் என்றும், இதற்காக தேசிய அரசியலில் டெல்லி கோட்டையை உடைக்க தயார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தால் போதும், டெல்லி கோட்டையை உடைக்க நான் தயாராக இருக்கிறேன். பிரதமர் மோடி நீங்கள் கவனமாக இருங்கள். இங்கு யாரும் உங்களைக் கண்டு அஞ்சவில்லை எனவும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.