பேசியதற்காக கண்டித்த ஆசிரியர் - பள்ளியில் வைத்தே விபரீத முடிவெடுத்த மாணவன்
தலைமையாசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவர் விபரீத முடிவெடுத்துள்ளார்.
கண்டித்த ஆசிரியர்
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நீரஜ் என்ற மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் நேற்று(05.02.2025) மாலை பள்ளி கட்டிடத்தின் பால்கனியில் நின்று நீரஜ் மற்றொரு மாணவனுடன் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த தலைமை ஆசிரியர் இருவரையும் தனது அறைக்குள் அழைத்து சென்று கண்டித்ததாக கூறப்படுகிறது.
கீழே குதித்த மாணவன்
அதன் பின்னர் வெளியே வந்த நீரஜ் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். உடனே பள்ளி ஊழியர்கள் நீரஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பள்ளி முதல்வரின் சித்திரவதை மற்றும் துன்புறுத்தலின் காரணமாக தான் தங்களது மகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக நீரஜின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர், இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.