கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞர் திடீர் மரணம்
கடலூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞர் திடீரென மரணமடைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது 25). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார், சிறு வயதில் இருந்தே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், சிவபிரகாஷ் வேலை பார்க்கும் நிறுவனத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர், சிவபிரகாசும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
வீட்டுக்கு வந்ததும் நேற்று காலை திடீரென வலிப்பு வந்துள்ளது, உடனடியாக உறவினர்கள் சிவபிரகாஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவபிரகாஷின் மரணத்துக்கு தடுப்பூசி போட்டது தான் காரணம் என்றும், அவரது உடலை முழுமையாக சோதித்த பின்னர் தடுப்பூசி போட்டிருந்தால் சிவபிரகாஷ் இறந்திருக்க மாட்டார் எனவும் உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.