Alexa உதவியுடன் குழந்தையை காப்பாற்றிய சிறுமி - வேலை வழங்கிய மஹிந்திரா!
சமயோஜிதமாக குரங்கிடம் இருந்து தப்பித்த சிறுமிக்கு தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
அலெக்ஸா
உத்தரப்பிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (13). இந்த சிறுமி தனது அக்கா குழந்தையுடன் ஒரு அறையில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது குரங்கு ஒன்று திடீரென சமையலறைக்குள் நுழைந்துள்ளது.
அந்த சமயத்தில் குடும்பத்தினர் வேறு அறையிலிருந்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை. அந்த குரங்கு சமையலறையில் இருந்த பாத்திரங்களை தூக்கி வீசியுள்ளது. பின்னர் குழந்தையை நோக்கி குரங்கு வந்ததால், அந்த குழந்தை அழுதிருக்கிறது.
அப்போது வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்ஸா சாதனம் இருப்பதை நிகிதா பார்த்துள்ளார். உடனே குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்ப அலெக்ஸா சாதனத்திடம் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமிக்கு பாராட்டு
அதன்படி நாய் குறைப்பது போன்ற ஒலியை அலெக்ஸா சாதனம் எழுப்பியதால், குரங்கு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நிகிதாவின் சமயோஜித புத்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், தொழில்நுட்பத்தை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகவும் உள்ளது. இந்நிலையில் அலெக்ஸாவை நாயை போல குரைக்க வைத்து சமயோஜிதமாக தப்பித்த சிறுமிக்கு எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.