சென்னை அருகே கார் ஓட்டிப் பழகியபோது விபத்து: 11 வயது சிறுவன் பரிதாபமாக பலி
மாங்காடு அருகே காரை ஓட்ட பழக்கும் போது ரிவேர்ஸ் எடுத்ததில் கார் மோதி சிறுவன் பலி. காரை அடித்து நொருக்கிய பொதுமக்கள். பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த போது நேர்ந்த விபரீதம்.
போரூர் அடுத்த மதனந்தபுரம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நிரோஷா (34), இவரது மகன் விஜய் (11), நேற்று மாலை அதே பகுதியில் உள்ள காலி மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவரின் உறவினர் பெண் மோனிகா (26), என்பவருக்கு காரை ஓட்டி கற்றுக் கொடுப்பதற்காக காலி மைதானத்திற்கு காரை எடுத்துச் சென்றவர் கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது காரை வேகமாக ரிவர்ஸ் எடுக்கும்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த விஜய் மீது கார் ஏறி இறங்கியதில் விஜய் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் மயங்கினான்.
இதையடுத்து சிறுவனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துபோன சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விபத்துக்கு காரணமான அஜய் மற்றும் மோனிகா ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த காரை அடித்து நொறுக்கினார்கள். மேலும் விபத்து ஏற்படுத்திய மோனிகாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பெற்றெடுக்க தாய் வீட்டிற்கு வந்த பெண் காரை ஓட்டி பழக்கும்போது ரிவர்ஸ் எடுத்ததில் கார் மோதி சிறுவன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது