கள்ளக்குறிச்சி கலவரத்தை துாண்டியவர்களை கண்டறிய குழு - அமைச்சர் பேட்டி

Anbil Mahesh Poyyamozhi E. V. Velu Kallakurichi School Death Kallakurichi
By Thahir Jul 19, 2022 02:47 AM GMT
Report

கலவரத்துக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கலவரம் 

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

மாணவி மர்ம முறையில் உயிரிழந்ததுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலவரத்தை துாண்டியவர்களை கண்டறிய குழு - அமைச்சர் பேட்டி | Team To Trace Kallakurichi Riot Survivors Minister

மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா கைது செய்யப்ட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 10 க்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

இதனிடையே, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள்ளனர்.

அமைச்சர்கள் ஆய்வு 

திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்ட்டுள்ளார்.

விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வே வேலு நேற்று கனியாமூர் தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கலவரத்தை கண்டறிய குழு 

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால் வன்முறை ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் என்ற பெயரில் பள்ளிமுன் கூடிய சில விஷமிகள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறை கட்டவிழ்த்து விட்ட போதிலும் மாணவர்கள், பெற்றோர்களை காவல்துறையினர் பாதுகாத்தனர். மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

3000க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. மாணவி உயிரிழந்த மறுதினமே அமைச்சர் சி.வி.கணேசன், மாணவியின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறி, அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.

நியாயம் கேட்டு போனவர்கள் மாணவர்களின் சான்றிதழை, பேருந்துகளை எரித்தது ஏன்? கேள்வி எழுப்பினார். எந்த அமைப்பாக இருந்தாலும் முறையான போராட்டம் அணுகுமுறையை கையாண்டிருக்கலாம். காவல்துறையின் நடவடிக்கையால் துப்பாக்கிசூடு எதுவும் இன்றி கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலவரத்தை துாண்டியவர்களை கண்டறிய குழு - அமைச்சர் பேட்டி | Team To Trace Kallakurichi Riot Survivors Minister

நீதி கேட்டு ஜனநாயக முறையில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. கலவரத்துக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

நீதிமன்றத்தை அணுகிய பின் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த திட்டமிட்டு கலவரம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்பதை கண்டறிய குழு அமைக்கப்படும்.

கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் யார், ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை அந்த குழு கண்டறியும். யார் தவறு செய்திருந்தாலும் உரிய தண்டனை பெற்று தரப்படும்.

கைது செய்யும்போது அரசியல் உள்நோக்கம் எதுவும் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடருகின்றன.

அரசியல் நோக்கத்துடன் யாரும் கைது செய்யவில்லை. மாணவியின் குடும்பத்தினர் வந்தவுடன் மறு உடற்கூராய்வு நாளை நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.