நடுவரின் முகத்தில் குத்திய அணி உரிமையாளர்; கால்பந்து போட்டியில் பரபரப்பு - வைரலாகும் Video!
கால்பந்தாட்டப் போட்டியின்போது அணி உரிமையாளர் நடுவரின் முகத்தில் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி சூப்பர் லீக்
துருக்கியில் நடைபெற்று வரும் துருக்கி சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் கைகூர் ரிஸ்போர் மற்றும் அங்காராகுகு அணிகள் மோதின. துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஆட்டம் டிரா ஆனதும் கைகூர் ரிஸ்போர் அணி ரசிகர்கள் ஆவேசத்துடன் மைதானத்திற்குள் நுழைந்தனர். அப்போது அந்த அணியின் உரிமையாளரும் மைதானத்திற்கு நுழைந்து, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடுவரின் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதனால் நடுவர் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார்.
நடுவர் மீது தாக்குதல்
பின்னாடியே ஓடி வந்த ரசிகர் ஒருவரும் நடுவரை ஓங்கி எட்டி மிதித்தார். இதனால் அங்கு ஒரு சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து அந்த நடுவர் டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கைகூர் ரிஸ்போர் அணியின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நடுவரை எட்டி உதைத்த 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு துருக்கி சூப்பர் லீக் கால்பந்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.