தவறு செய்து விட்டாரா விராட் கோலி - அதிகரிக்கும் எதிர்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை சேர்க்காமல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தவறு செய்து விட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ரன்களை குவித்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பவுலர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதேசமயம் ஆடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பொதுவாகவே இடது கை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்யும் திறமை அஸ்வினுக்கு உண்டு.
அந்த வகையில் பார்த்தால் இங்கிலாந்து அணியில் ரோரி பேர்ன்ஸ், டேவிட் மலன், மொயின் அலி மற்றும் சாமி கர்ரன் என நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் அஸ்வினை சேர்க்காமல் விராட் கோலி தவறிழைத்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால் பொதுவாக இங்கிலாந்து சூழல் சுழலுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்காது என்பதால் இந்தியா ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடி வருகிறது. அப்படி சேர்க்கப்பட்ட ஜடேஜா இதுவரை 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.