தேர்தல் பயிற்சியின்போது சுவர் ஏறி குதித்து தப்பியோடிய ஆசிரியர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

teacher wall Pudukkottai jump
By Jon Mar 28, 2021 11:17 AM GMT
Report

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 12.30 மணிக்கு மேல் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டு சென்றார்.

மதியம் 1 மணிக்கு மேல் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது, ஆசிரியர்கள் பலர் உணவு பொட்டலங்களை வாங்கிவிட்டு வெளியே செல்ல முயன்றனர். இதனால் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. அப்போது ஆசிரியர்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் நுழைவுவாயில் முன்பு தவித்தனர்.

தேர்தல் பயிற்சியின்போது சுவர் ஏறி குதித்து தப்பியோடிய ஆசிரியர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு | Teachers Jumped Wall Election Training Escaped

இதற்கிடையில் சிலர் தங்களுக்கு வெளியில் சென்று உணவு சாப்பிட வேண்டும் நுழைவுவாயில் கதவை திறந்துவிடுங்கள் எனக் கூறினர். மேலும் அங்கிருந்த வருவாய்த்துறை ஊழியர்களிடமும், பள்ளி நிர்வாகத்தினரிடமும் முறையிட்டனர். ஆனால் அவர்களோ, உணவு இடைவேளைக்குபின் மேலும் பயிற்சி ஒரு மணி நேரம் நடைபெறும் எனவும் அதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பதால் பாதியில் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர்.

இதனிடையே, அதிகாரிகளின் வாகனங்கள் வெளியே செல்வதற்காக நுழைவு வாயில் திறக்கப்பட்ட போது அந்த சில நிமிட இடைவெளியில் சிலர் தப்பினர். இதற்கிடையில் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் பள்ளியின் பக்கவாட்டு சுவரில் ஏறி குதித்து ஆசிரியர்களும் ஆசிரியைகளும் வெளியே சென்றனர். இந்த பயிற்சி ஏற்கனவே வழங்கப்பட்டது தான். அதனால் மதியத்திற்கு மேல் இருக்கத்தேவையில்லை எனக் கூறினர் அந்த ஆசிரியர்கள்.