தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை - கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் போது ஆசியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இது குறித்து அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு உள்ளே வரும் ஆசிரியர் பணி முடியும் வரை வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கூடுதல் மதிப்பெண்களோ அல்லது குறைவான மதிப்பெண்களோ வழங்க கூடாது.
முறையாக விடைத்தாள்களை திருத்தி மதிப்பீடு செய்து சரியான மதிப்பெண்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீடுகளில் தவறு நேர்ந்தால் விடைத்தாள் திருத்தப்பணி மையத்திற்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடைத்தாள் திருத்தும் போது செல்போன் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் போதும் தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 79 மையங்களில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.