மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்..பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!
கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பெற்றோர் முற்றுகையிடடதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்
கோவை பாலக்காடு சாலை சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.அந்த பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சில மாணவிகள் இது தொடர்பாக தங்களின் பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
ஆனால் அந்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆசிரியரின் விபரம் குறித்து பள்ளி நிர்வாகம் எவ்வித பதிலும் கூறாமல் இருக்கவே போராட்டம் தீவிரம் அடைந்ததால் துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்டோர் விரைந்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியர் பிரபாகரன் கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளியில் இருந்து கடந்த வாரம் மாறுதலாகி சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததாகவும் வந்த சில தினங்களிலேயே பல மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் பாலியல் தொடர்பாக மாணவிகளிடம் பேசியதும் தெரிய வந்தது.
பின்னர் பெற்றோர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பிரபாகரன் பணியினை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அவர் கைது கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்தனர்.
மேலும் அடுத்த சில நிமிடங்களில் கோவை சரவணம்பட்டி பகுதியில் வைத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவிக்கவே சமாதானம் அடைந்த பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியானதையடுத்து காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே வேளையில் பள்ளிக்கு இன்று விடுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்தை அடுத்து அந்த பள்ளி சூறையாடப்பட்ட சம்பவம் இன்னும் ஆறாத நிலையில் கோவையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் காரணமாக சுகுணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.