கொடூரத்தின் உச்சம்; இஸ்லாமிய மாணவனை சக மாணவர்களை கொண்டு அடிக்க வைத்த ஆசிரியை - வீடியோ வைரல்!
இஸ்லாமிய மாணவனை சக மாணவர்களை கொண்டு அடிக்க வைத்த ஆசிரியையின் வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியை
உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் திரிப்தா தியாகி என்ற நபர் ஆசிரியையாக பணிபுரிகிறார். அந்த ஆசிரியை தனது வகுப்பில் பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவனை நிற்க வைத்து சக மாணவ, மாணவிகள் ஒவ்வொருவராக அழைத்து கன்னத்தில் அறைய சொல்லும் வீடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் அழும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது. மாணவன் பெருக்கல் அட்டவணை கணக்கை தவறாக எழுதியதால் இந்த கேவலமான செயலில் ஆசிரியை ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோவில் 'சிறுவனுடைய இஸ்லாம் மதத்தைக குறிப்பிட்டு 'முகமதிய குழந்தைகள்' என இழிவாக பேசியுள்ளார் ஆசிரியை. மேலும் அந்த வீடியோவில் 'இந்த முஸ்லிம் குழந்தைகள் அனைவரும், எந்தப் பகுதிக்காவது செல்லுங்கள் என்று சொல்லியுள்ளார்.
மாணவனை அறைந்து விட்டு உட்கார்ந்த இன்னொரு மாணவனிடம் 'ஏன் இவ்வளவு லேசாக அடிக்கிற? அவனை கடுமையாக அடி” என்றும் கூறியுள்ளார். பிற மாணவர்களிடம் அடுத்து யாருடைய முறை எனவும் கேட்டுள்ளார்.
வெளியான வீடியோ
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் வீடியோவை பகிர்ந்து ஆசிரியை மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்களும் இதனை கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.
இந்நிலையில் முசாபர்நகர் காவல் நிலையத்தில் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், சிறுவனின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விளக்கமளித்து உள்ளார்