டீ கூட குடிக்க வழியில்லை; உச்சம் தொட்ட விலைவாசி - பஞ்சத்தால் கதறும் மக்கள்
பாகிஸ்தானில் பட்டினியும், உணவுப் பஞ்சமும் தலைவிரித்தாடி வருகிறது.
உணவுப் பஞ்சம்
பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனிடையே, பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவுப்பொருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை உச்சம் தொட்டு வருகிறது.

குறிப்பாக, மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.4000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.400, ஒரு கிலோ வெங்காயம் ரூ.380, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு
இதனால் அரசு குடோன்களில் இருந்து ஓரளவுக்கு குறைந்த விலையில் கோதுமை வாங்க மக்கள் இடையே கடும் சண்டை ஏற்பட்டு வருகிறது. உணவுப் பஞ்சம் காரணமாக தினசரி இரு வேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் மக்கள் டீ யை மட்டுமே குடித்து வந்தனர்.
ஆனால் அதற்கும் தற்போது வழியில்லாமல் ஆகிவிட்டது. ஒரு கிலோ டீ தூளின் விலை ரூ.1,600 வரை உயர்ந்துவிட்டது. இந்தியாவில் ஒரூ கிலோ டீ தூள் விலை ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது.
பாகிஸ்தான் துறைமுகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து டீ தூள்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் பணம் இல்லாததால் விலை இந்த அளவுக்கு உச்சம் கண்டுள்ளது.