விற்பனைக்கு வந்தாச்சு “உக்ரைன் அதிபர்” டீத்தூள் - கடுப்பான இணையவாசிகள்
உக்ரைன் அதிபர் பெயரில் ‘ஜெலன்ஸ்கி’ என்ற டீத்தூளை அசாமைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. போரை நிறுத்தச் சொல்லி உலக நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகிறது.

அதேசமயம் வழக்கம்போல ஒரு விஷயம் ஊரையே பற்றி எரிய வைத்துக் கொண்டிருக்க மற்றோருபுறம் அதை வைத்து வியாபாரமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அரோமட்டிக் டீ என்ற நிறுவனம், உக்ரைன் அதிபர் பெயரில் ஜெலன்ஸ்கி என்ற டீத்தூளை அறிமுகம் செய்துள்ளது.
உக்ரைன் அதிபரின் துணிச்சலையும், வீரத்தையும் கவுரவிக்கும் வகையில் இதனை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் ரஞ்சித் பருவா கூறியுள்ளார். உக்ரைனில் இருந்து தப்பிக்க செய்வதாக அமெரிக்கா விடுத்த அழைப்பை கூட அவர் நிராகரித்து விட்ட அவரது குணநலனை பாராட்டுகிறோம். இந்த டீத்தூளை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.