‘’ தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டிதான் ‘’ - பொங்கல் தினத்தன்று டாஸ்மாக்கில் விற்பனை எவ்வுளவு தெரியுமா?

பொங்கல் தினத்தை ஒட்டி சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், 'டாஸ்மாக்' கிடங்குகளில் இருந்து, மதுக் கடைகளுக்கு அதிக அளவில் மது வகைகள் சப்ளை செய்யப்பட்டது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லறை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை நாட்களில் அதை விட அதிகமாகவும் மது வகைகள் விற்பனை ஆகின்றன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் ரூ. 317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. ஜனவரி 12- ல் ரூ. 155.06 கோடியும், ஜனவரி 13- ல் ரூ. 203. 05 கோடியும் விற்ற நிலையில் நேற்று ரூ. 317.08 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

மதுரை மண்டலம் ரூ. 68.76 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 59.65 கோடியும் என ரூ. 317.08 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மேலும் , சென்னை மண்டலத்தில் ரூ. 59.28 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ. 65.52 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ. 63.87 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 3 நாட்களில் ரூ. 675.19 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ. 144.74 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்