என்ன சொல்றீங்க... டாஸ்மாக் நஷ்டத்துல போகுதா? - தமிழக குடிமகன்கள் அதிர்ச்சி
தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் கடந்த 6 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் காரணியாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி அளவில் மதுவிற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அதேசமயம் பண்டிகை நாட்கள், வார விடுமுறை போன்ற நாட்களில் இதன் விற்பனை பல கோடிக்கு நடைபெறுவது வழக்கம். சராசரியாக தற்போது5,425 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் சில காலம் மூடப்பட்டதால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரை டாஸ்மாக் நஷ்டத்தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவருக்கு தமிழ்நாடு வாணிப கழகம் ஆண்டுவாரியான நஷ்டத்தைக் குறிப்பிட்டு தகவல் அனுப்பியிருக்கிறது. அதன்படி, 2010-11ல் ரூ.3.56 கோடி, 2011-12ல் ரூ.1.25 கோடி, 2012-13ல் ரூ.103.64 கோடி, 2013-14ல் ரூ.64.44 கோடி, 2015-16ம் ஆண்டில் ரூ.67.61 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.71.93 கோடிக்கு டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21 நிதியாண்டில் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்கள் குறித்த கணக்கு தொகுக்கப்படுவதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக குடிமகன்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.