டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலித்தால், நுகர்வோர் நேரடியாக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும், அந்த புகார்களின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானம் வாங்கும் ஒவ்வொரு நுகர்வோருக்கும் கட்டாயமாக ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மேலும், ரசீது புத்தகங்களை முறையாக பராமரிக்கவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

வழக்கு விசாரணை
சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
மேலும், கடந்த 2022 முதல் 2026 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மீட்டு அரசுக்கு செலுத்தவும், தவறில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுபான விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும் என அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.
அதிகமான கூட்டம் காரணமாக ரசீது வழங்குவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு நீதிபதி, சாதாரண பொருட்கள் வாங்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில்கூட ரசீது வழங்கப்படும் நிலையில், அரசுக்கு அதிக வருவாய் அளிக்கும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினார்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான இடங்களில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நுகர்வோர் கூடுதல் தொகையை வழங்கக் கூடாது என்றும், அரசு நிர்ணயித்த விதிகளை மீறி ஊழியர்கள் கூடுதல் கட்டணம் கேட்டால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
பெறப்படும் புகார்களில் தாமதமின்றி வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், கூட்டம் அதிகமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளில் காவலர்களை பணியமர்த்த உள்துறைக்கும் உத்தரவிட்டது. மேலும், மனுதாரர் அளித்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.