மது அருந்துபவரை திருத்தினால் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - இனி ஏமாற்றவும் முடியாது!
டாஸ்மாக் தொடர்பான சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக்
டாஸ்மாக்' பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக, 21 சங்க நிர்வாகிகளுடன், தலைமைச் செயலகத்தில், அமைச்சர் முத்துசாமி பேச்சு நடத்தினார். அதன்பின் பேசிய அவர், 59 கோரிக்கைகளில், 39 நிறைவேற்றப்பட்டுள்ளன; மற்றவை விரைவில் நிறைவேற்றப்படும்.
கடை வாடகை, இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. இவற்றை ஒழுங்கு செய்து, துறையே அதற்கான பொறுப்பை ஏற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தனி மின் இணைப்பு இல்லாத கடைகளில், மின் கட்டணத்தை தொழிலாளர்கள் கட்டும் நிலை உள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
தற்போது, தனித்தனி மீட்டர் பொருத்தி, டாஸ்மாக் நிர்வாகம் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், 3,000 கடைகளில் உள்ளன. மேலும், 500 கடைகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணம் வைக்க பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும். பாட்டில் உடைந்தால், விற்பனையாளர்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டனர். அதை, துறை சார்பில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறிய வயதினர், முதல்முறையாக கடைக்கு வருவோரை கண்டறிந்து, அவர்களிடம் பேசி குடிப் பழக்கத்தை தடுக்க, ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளோம்.
அதுபோன்ற நபர்களின் பெயர், மொபைல் போன் பெற்று தந்தால், அவர்களுக்கு தனி கவுன்சிலிங் அளிக்கப்படும். இப்படி, அதிக அளவிலானோர் திருந்த ஏற்பாடு செய்தவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, கவுரவிக்கப்படுவர். அனைத்து கடைகளிலும், மின்னணு விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுபானம் வாங்குவது முதல் விற்பனை செய்வது வரை, அனைத்து பணிகளையும், கணினி வழியே கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து, விற்பனை ரசீது வழங்கவும் வசதி செய்யப்படும். அப்போது, பிரச்னைகளுக்கு முழு தீர்வு ஏற்படும். ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து, அடுத்த கூட்டத்தில் பேச உள்ளோம்.
மதுபானங்களுக்கு ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்கக் கூடாது என, கண்டிப்புடன் தெரிவித்துஉள்ளோம்.
பாட்டிலுக்கு பதிலாக, 'டெட்ரா பேக்' பயன்படுத்துவது குறித்து முடிவு செய்ய, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி அறிக்கை அளித்த பின் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.