பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏன் பாஜக போராடவில்லை - செந்தில் பாலாஜி கேள்வி!
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இன்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது பாஜகவினர் முன்வைத்த அனைத்து கருத்துக்களுக்கும் திமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பாதிப்பு குறைவாக 27 மாவட்டங்களில் தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது. மற்ற 11 மாவட்டங்களில் திறக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருந்த போதே கர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு தான் இருந்தது என்றும்,. ஆனால், பாதிப்பு உச்சத்தில் இருந்த போது தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவில் பாதிப்பு குறையாத போதும் மதுபானம் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக போராடும் பாஜக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக அரசியலுக்காகவும் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் இந்த போராட்டத்தை நடத்துவதாக குற்றஞ்சாட்டினார்.