மதுவுக்காக எல்லைகளைக் கடந்த மக்கள்... 11 மாவட்ட மக்கள் நிலை என்ன?
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் 11 மாவட்ட மக்கள் எல்லைகளைக் கடந்து மது வாங்கி சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் 27 மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் வரிசையில் நேரம் காத்திருந்து வாங்கி சென்றனர். ஆனால் மதுக்கடைகள் திறக்கப்படாத 11 மாவட்ட மக்கள் எல்லைகளைக் கடந்து திறக்கப்பட்ட மாவட்டங்களில் மது வாங்கி சென்றனர்.
சேலம் மாவட்ட மக்கள் தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் அருகே உள்ள பாளையம் புதூரிலும், திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மக்கள் திண்டுக்கல் மாவட்டம் எல்லையாக உள்ள மடத்துக்குளத்தை நோக்கியும் படையெடுத்தனர்.
மதுக்கடையை திறந்தவுடன் மதுபானத்திற்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாலை வரை மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர்.