தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு வருமா? கலக்கத்தில் குடிமகன்கள்
டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சம்மேளனம் தமிழக அரசை வலியுறுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிடியில் மனித உயிர்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றன. எப்போதுதான் இந்த நிலை மாறும் என்று மக்கள் ஏக்கத்தில் உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவின் தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி அதிகரித்து வருகிறது.
இதனால் மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணி வரை கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டை போல டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை பெருகி வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் 100க்கும் மேற்பட்ட நபர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்து செல்கிறார்கள். ஆனால், கடைக்கு எந்தவித கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்கவில்லை. இதனால், டாஸ்மாக் பணியாளர்கள் இடையே அச்சத்தை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டபோது, 10க்கு மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ஆனால், தற்போது கொரோனா 2ம் அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணி வரை செயல்பட பணி நேரத்தை குறைக்க வேண்டும்.
சுகாதாரமற்ற பார்களை மூட வேண்டும் என 10 நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளரிடம் கடிதம் எழுதி கொடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு இனியாவது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், பார்களை மூட வேண்டும், சமூக இடைவெளியை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளில் டோக்கன் முறையை செயல்படுத்த வேண்டும் என்று அவர் பேசினார்.