டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்தார் மகாத்மா காந்தியின் பேத்தி
டெல்லியின் எல்லைகளில் கடந்த சில மாதங்களாகவே வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளை நேரில் சந்தித்து மகாத்மா காந்தியின் பேத்தி ஆதரவு தெரிவித்துள்ளார். காந்தி பவுன்டேஷனின் பணியாளர்களுடன் தாரா காந்தி பட்டாச்சார்யா காசிப்பூர் சென்றார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார்.
அப்போது தனது ஆதரவை அவர்களிடம் தெரிவித்தார். இது குறித்து தாரா காந்தி பட்டாச்சார்யா பேசுகையில், எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் நான் இங்க வரவில்லை. என்னுடன் போலீஸ் பாதுகாவலர்களும் இல்லை. நான் 87 வயதான நாட்டின் மூத்த குடிமகள். நமது எல்லோர் வாழ்க்கைக்கும் உணவு அளிப்பவர்கள் விவசாயிகள்.
அதனால்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். விவசாய சகோதரர்கள் ஆதாயம் அடையவில்லை என்றால், நாட்டிற்கு பலன் கிடைக்காது. நான் எப்போதும் உண்மைக்கு துணை நிற்பேன். எனக்கு நிச்சயமாக அரசியல் அறிவு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் 80 நாட்களை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.