சாய்பல்லவியை போல் என்னையும் கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள்... கருப்பி, பரட்டைனு கிண்டலடிப்பாங்க - தமிழிசை உருக்கம்
நடிகை சாய் பல்லவியை உருவகேலி செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதுவை ஆளுநர் தமிழிசையும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படமும் பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, மேலும் சில படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, சமீபத்தில் சமூக வலைதளத்தில், அவ லட்சணமாக இருப்பதாகவும், விதவிதமான கேமரா ஆங்கிள் மூலம் அவரை அழகாக திரையில் காட்டுகிறார்கள் என்று நெட்டிசன் ஒருவர் கேலி செய்துள்ளார்.
தற்போது நெட்டிசனின் இந்த பதிவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அந்த வகையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதோடு, தான் எதிர்கொண்ட உருவகேலி குறித்தும் உருக்கமாக பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “என்னையும் உருவ கேலி செய்திருக்கிறார்கள். நான் அதை துணிச்சலாக எதிர்கொண்டேன். கருப்பி, குள்ளச்சி, பரட்டைனு கிண்டலடிச்சிருக்காங்க. சில சமயங்களில் அது மிகவும் காயப்படுத்தும். இவற்றையெல்லாம் தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும்” என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.