ஜெயலலிதா ஒரு ஹிந்துத்துவ தலைவர் தான் - தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தான கருத்து மோதல்கள் தற்போது தமிழக அரசியலில் அதிகரித்துள்ளது.
தமிழிசை உறுதி
பாஜகவை சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என உறுதிப்பட தெரிவித்தார்.
பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா பங்கேற்று இருக்கிறார் என்றும், வேட்புமனு தாக்கலை அவர் நல்ல நேரம் பார்த்து செய்பவர் என்றும் சுட்டிக்காட்டினார் தமிழிசை.
தொடர்ந்து பேசியவர், தற்போது ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார் எனக் கூறி அதிமுகவினர் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர் என விமர்சித்து, தாங்கள் அவரை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா சர்ச்சை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவர் ஒரு இந்துத்துவ தலைவர் என் கூற பெரும் சர்ச்சையாக அது மாறியுள்ளது. அதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டங்கள் எழுப்பப்பட்டது.
அதே போல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடவுள் நம்பிக்கை இருந்ததே தவிர அவர் மத பற்று கொண்டிருக்கவில்லை என சசிகலாவும் அறிக்கை வெளியிட்டு பாஜகவிற்கு தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.